Friday, 6 June 2014

வரலாறு - மூக்கறுப்பு யுத்தம்



                    17-ஆம் நூற்றாண்டுக்குச் செல்வோம். இடம் தமிழ்நாடு-கர்நாடகா. அக்காலத்தில் நாயக்கர்களின் மதுரை நாடு - மைசூர்நாடு. 
                    மதுரைநாட்டை ஆண்டுகொண்டிருந்தவர் திருமலை நாயக்கர். 1623 இலிருந்து 1659 வரைக்கும் மதுரைய ஆண்டவர். 
                இவர் தம்முடைய ஆட்சிக் காலத்தில் தென்னாட்டு அரசியலில் பூந்து விளையாடியவர். விஜயநகரப் பேரரசின் அங்கங்களாக விளங்கியவைதாம் மதுரை, மைசூர், செஞ்சி, தஞ்சை ஆகிய நாடுகள். பேரரசுக்குக் கப்பம் கட்டி படைகளையும் அனுப்பவேண்டிய கட்டாயம். ஆனால் பேரரசு பலவீனம் ஆனபிறகு, நாயக்கர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை. திருமலை நாயக்கர் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகச் சேர்ந்துகொண்டும் தூண்டிவிட்டுக்கொண்டும் போர்புரிந்துகொண்டும் குழப்படிகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார். தமிழ்நாட்டைக் கைப்பற்ற எண்ணியிருந்த கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய சுல்த்தான்களைத் தூண்டிவிடுவது; அவர்களுடன் சேர்ந்துகொண்டு மற்ற நாடுகளுடன் போரிடுதல்; அதன்மூலம் அவர்களைப் பலவீனப் படுத்துதல் போன்றவற்றைச்செய்துவந்தார். அவர் செய்த் காரியங்களால் பெயரளவில் இருந்த விஜயநகரப்பேரரசு அறவே அழிந்துபோயிற்று. கோல்கொண்டா, பீஜப்பூர் ஆகிய சுல்தானியர்களுக்கு மேன்மேலும் தமிழ்நாட்டின் பகுதிகள் அடிமையாகின. அவர்களுக்குத்தான் அதிக லாபம்.
                    இப்படிப்பட்ட விஷமங்களால் துன்பத்துக்கு ஆளாகியவர்களில் ஒருவர் மைசூர் நாட்டின் அரசர் கண்டீரவ நரச ராஜா. இவர் 1638 இலிருந்து 1659வரைக்கும் மைசூரை ஆண்டவர்.
                    திருமலை நாயக்கரைப் பழிவாங்கத் தருணம் பார்த்திருந்தார் நரச ராஜா. 
                    தக்க வாய்ப்புக் கிடைத்ததும் மதுரைநாட்டின்மீது படையெடுத்தார். மைசூர் படைகள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியமங்கலத்தை முதலில் பிடித்துக்கொண்டன. மதுரை நாட்டில் சேலம், தர்மபுரி, கரூர், திருச்சியிலிருந்து தெற்கில் உள்ள பிரதேசங்கள் எல்லாமே இருந்தன. தஞ்சை, செஞ்சி ஆகியவை தனி நாடுகள். 

                    சத்தியமங்கலத்திலிருந்து மைசூர்ப்படைகள் மிகவேகமாக மதுரையை நோக்கி வந்துவிட்டன. 
                    அந்தப் போரில் மைசூர்ப் படைகள் பெரும் அட்டூழியங்களைச் செய்தன. வழியில் பிடிபடுகின்றவர்களின் மூக்குகளையெல்லாம் அறுத்துவிட்டார்கள். அவ்வாறு அறுபட்ட மூக்குகளுக்குத் தக்க பரிசு கொடுக்கச் செய்திருந்தார் நரச ராஜா. மேலுதட்டுடன் மூக்கு இருக்கவேண்டும். மேலுதட்டின்மீது மீசை இருந்தால், அந்த மூக்கு அதிகப் பரிசு.
                    இப்படியே மைசூர்ப்படைகள் மதுரைக்கு மிக அருகில் வந்துவிட்டன. 
                    அப்போது திருமலை நாயக்கருக்கு எழுபத்தைந்து வயது. அவர் கொஞ்சமும் போரிடவோ, படைகளைத் திரட்டவோ இயலாத நிலை. 
                    ஆபத்து நெருங்கியபோது, தன்னுடைய மூத்த ராணியாரைக் கொண்டு ராமநாதபுரத்தின் ரகுநாத சேதுபதியிடம் உதவி கோரி கடிதம் எழுதி அனுப்பச்செய்தார். 
                    அந்தக் கடிதத்தைக் கண்டதும் சேதுபதி இருபத்தையாயிரம் பேர் கொண்ட நன்கு தேர்ச்சி பெற்ற படையன்றை அனுப்பினார். 
                    ரகுநாத சேதுபதிக்கு டச்சுக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. டச்சுக்காரர்கள், இத்தாலியர்கள் முதலிய தளபதிகளைக் கொண்டு தமது வீரர்களுக்கு மிக நவீனமான முறைகளில் பய்ற்சியளிக்கச் செய்திருந்தார். மேலும் துப்பாக்கிகள் தாங்கிய படையும் அவரிடம் இருந்தது. பீரங்கிகளும் இருந்தன. ஆறே மணி நேரத்தில் இருபதினாயிரம் போர்வீரர்களைத் திரட்டக்கூடிய தயார் நிலையில் தம் நாட்டை வைத்திருந்தார்.
                    மைசூர்ப் படை மதுரையிலிருந்து சில மைல்கள் தொலைவில் இருக்கும்போது, ரகுநாத சேதுபதியின் படை, மைசூர்ப் படைகளுக்கும் மதுரைக்கோட்டையின் சுவருக்கும் இடையே இன்னொரு சுவர் போல அணிவகுத்துக் கொண்டது. இதன் நடுவில் திருமலை நாயக்கர் முப்பத்தையாயிரம் வீரர்கள் கொண்ட படையன்றையும் திரட்டச்செய்தார். இந்தப் பெரும்படையைப் பார்த்த மைசூர் படைத்தளபதி இன்னும் அதிகப் படைகளைக் கேட்டு மைசூருக்குச் செய்தியனுப்பினான். அதே நேரத்தில் மதுரை நாயக்கப் படையின் தளபதியையும் கையூட்டுக் கொடுத்துத் தன் வசமாக்கிக் கொண்டான். ஆகவே நாயக்கப்படைகள் பின்வாங்கின. இருப்பினும் சேதுபதி, தம்முடைய படையைக் கொண்டு தடுத்து நிறுத்தப்பட்ட மைசூர்ப்படைகள் விரட்டப்பட்டன. மைசூர்ப்படைகள் மிக வேகமாகப் பின்னோக்கித் திரும்பி ஓடின. திண்டுக்கல்லில் இருந்துகொண்டார்கள். மைசூரிலிருந்து வந்த இருபதினாயிரம் வீரர்கள் கொண்ட உதவிப்படை அங்கு வந்து அவர்களுடன் சேர்ந்துகொண்டது. 
                    கடும்போர் நடந்தது. இருதரப்பிலும் மொத்தம் பன்னிரண்டாயிரம் வீரர்கள் இறந்தனர். அந்த நிலையில் தப்பினால் போதும் என்ற நிலைக்கு மைசூர்ப் படை வந்துவிட்டது. எஞ்சியிருந்த வீரர்கள் மைசூரை நோக்கி ஓடினார்கள்.  அதன்பின்னர் திருமலை நாயக்கர், தம் தம்பியின் தலைமையில் ஒரு படையைத் திரட்டி, பதினெட்டுப் பாளையங்களின் படைகளையும் துணைக்குக் கொண்டு, மைசூரின்மீது படையெடுக்கச் செய்தார். அந்தப் படையினர் திருமலை நாயக்கரின் கட்டளையின்பேரில் தங்களிடம் அகப்பட்ட மைசூர்க்காரர்களின் மூக்குகளை அறுத்தது. 

No comments:

Post a Comment